தர்மகர்த்தா

உடுக்கியவளை விநாயகர் ஆலயத் தொண்டரும் அறங்காவலருமாகிய திரு. சி. கனகசபாபதி அவர்கள் வழங்கும் நற்செய்தி. அன்பார்ந்த விநாயக அடியார்களே! உ... thumbnail 1 summary
உடுக்கியவளை விநாயகர் ஆலயத் தொண்டரும் அறங்காவலருமாகிய திரு. சி. கனகசபாபதி அவர்கள் வழங்கும் நற்செய்தி.

அன்பார்ந்த விநாயக அடியார்களே!

உடுக்கியவளை விநாயகர் ஆலயம் மற்றைய ஆலயங்களைப் போல் அன்றி வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அனேக தலங்களில் மக்கள் ஆலயங்களை அமைத்து விக்கிரகங்களை வைத்து வழிபடுகின்றனர். இந்த ஆலயம், விநாயகரே தமது அடியாருடைய பக்தியின் மேலீட்டிலே கட்டுப்பட்டு கைதடி என்ற ஊரில் இருந்து இங்கு வந்து கோயில் கொண்டு எழுந்தருளினார் என்று ஆலய வரலாறு கூறுகின்றது. அன்றுதொட்டு இன்று வரை இந்த ஆலயத்தில் நடைபெறுகின்ற முன்னேற்றச் செயல்கள் எல்லாம் நாம் நினைக்காமலே விநாயகர் திரவருளால் நடைபெறுகின்றது. எல்லாம் அவன் செயல் அன்றி எம் செயல் ஒன்றும் இல்லை.

'பக்திவலையில் படுவோன் காண்க' என்னும் கூற்றிற்கு அமைய எமது மூதாதையராகிய நாராயண உடையார் என்பவரின் பக்தியில் கட்டுப்பட்டு விநாயகர் தாமாகவே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார்.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் வேண்டுமோ என்ற கூற்றுக்கு அமைய தொண்டர்களுடைய திருத்தொண்டு சிறப்புற்று விளங்கி ஆலயத்தை சிறப்புற வைக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள விநாயக அடியார்களின் உள்ளங்களிலே விநாயகர் திருவருள் பாலித்து தாமாகவே முன்வந்து உதவிகள் செய்து ஆலயம் சிறப்புற்று விளங்குகின்றது.

ஆலயங்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை புனருத்தாரணமும் கும்பாபிஷேகமும் நடைபெறும் வழக்கத்திற்கமைவாகவும், அத்தியாவசியத் திருப்பணிகள் செய்யவேண்டி இருக்கின்றமையாலும் தற்போது திருப்பணிச் சபையானது உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வேளைளில் ஆலயத்தின் பெயரில் இணைளத்தளம் உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இவ் இணையத்தளமானது உலகத் தமிழ் மக்களுக்கு எமது ஆலயம் தொடர்பாகவும் இந்து சமயம் தொடர்பாகவும் கருத்துக்களை எடுத்துச் செல்லும் எனக் கூறி என் ஆசிகளை வழங்குகின்றேன்.

     'மேன்னை கொள் உடுக்கியவளை விநாயகள் திருவருள் விளங்குக உலகம் எல்லாம்'
15.01.2016