ஆலய வரலாறு

உடுக்கியவளைப் பிள்ளையார் மகின்மை கேண்மின் உளம் மகிழ்ந்தே அடியார் உள்ளங்களிலே உறைந்தார். அடுக்கியவளை அணிந்த சித்திபுத்தி கணவன் நடுக்கி... thumbnail 1 summary
உடுக்கியவளைப் பிள்ளையார் மகின்மை கேண்மின்
உளம் மகிழ்ந்தே அடியார் உள்ளங்களிலே உறைந்தார்.
அடுக்கியவளை அணிந்த சித்திபுத்தி கணவன்
நடுக்கிடும்வேளை பகைமுடித்து எம்மைக்காக்கும் அண்ணல்
-உடுக்கியவளை

அன்பர்தம் அன்புக்குள் அகப்படும் ஆனைமுகன்
அப்பம் முப்பழம் மோதகம் அடியார்தர மகிழ்வோன்
அன்பு மலர்சொரிந்து அகம் நெகிழ்ந்தே பாட
அற்புதங்கள் புரிவான் ஆதி கணநாதன்.
-உடுக்கியவளை


சைவமும் தமிழும் சிறந்து விளங்கும் திருத்தலங்கள் மிக்க வட்டுக்கோட்டைக் கிராமத்தில் மூளாய் வீதியில் உடுக்கியவளைப் பதியில் இவ் ஆலயம் காணப்படுகின்றது.

கி.பி பதினெட்டாம் (18ம்) நூற்றாண்டில் - (1760) முருக உடையார், நாராயண உடையார் ஆகிய சைவ சீலர்கள் வாழ்ந்துவந்தனர். நாராயண உடையார் பிள்ளையார் மீது பெரும் பக்தி பூண்ட ஆசாரசீலர். வருடம் தோறும் மார்கழி மாத விநாயகர் நோன்பு விரத காலத்தில் கைதடி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் வீரகத்திப் பிள்ளையாரிடம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவ் ஆலயம் நம் ஊரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தூரத்திலும், கைதடிச் சந்தியிலிருற்து வடக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலும் இருக்கின்றது. உடையார்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இவ் ஆலயம் இன்றும் அவர்கள் பரம்பரையினரே அறங்காவலர்களாக இருக்கின்றனர். சிறந்த போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் அவர் எண்பது வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது, தள்ளாத வயதிலும் விநாயகரைத் தொழ விரும்பினராய், கால் நடையாக வழக்கம் போல் நடந்து சென்று விநாயகரை வழிபட்டுத் திரும்பினார். திரும்பி வரும்பொழுது சங்கரத்தை என்னும் ஊரிலுள்ள வழுக்கையாற்றுப் பிரதேசத்தைத் தாண்டியுள்ள நவாலி என்னும் ஊர் ஆரம்பிக்கும் இடத்தை வந்தடைந்தார். உடலின் தளர்வினால், களைப்படைந்து அவ்விடத்தில் உள்ள களையோடைக் கண்ணகை அம்மன் கோயில் வாசலில் வீழ்ந்துவிட்டார்.

அவர் கண்ணகை அம்மன் வாசலில் அவரை அறியாமலே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். அச்சமயம் அவரின் கணவில் பிள்ளையார் தோன்றி 'நீர் இனிமேல் கைதடிக்கு வரவேண்டாம். உமது பாட்டனாரின் பெட்டகத்தில் நான் இருக்கின்றேன். என்னை எடுத்துக் கோயில் அமைத்து அங்கேயே விரதம் நோற்று வணங்கிடுவாய்' என்று அருள் மொழிந்தார். கனவில் இருந்து விழித்த அடியார் பிள்ளையாரின் கட்டளையை நினைந்து நெஞ்றுசுருகி இறைவன் கட்டளைப்படி வீடு திருப்பினார். ஆண்டவர் சொல்லிய செய்தியை உறவினருக்கு அறிவித்தார். அவர்கள் சூழ, பெட்டகத்தைத் திறந்து பார்த்த பொழுது, அங்கு பட்டுச்சேலையாற் கட்டப்பட்ட சந்தன மரத்தாலான பிள்ளையாரின் திரு உருவம் காணப்பட்டது. எல்லோரும் பக்திப் பரவசமடைந்து விநாயகரைத் தொழுது பரமானநடதமுற்றனர். ஆலயம் அமைத்து விநாயகரின் திருவுருவை எழுந்தருளிவித்து வழிபடுவதற்கு ஏற்ற திருத்தலம் ஏதெனத் தெரியாது தவிர்த்த உடையார், இறைவனைப் பணிந்து நின்றார்.

இப்பொழுது கோயில் அமைந்துள்ள உடுக்கியவளையில் அக்காலத்திற் பெரிய மாமரம் ஒன்று இருந்தது. அம் மரத்தடியில் வருடம் தோறும் நாராயண உடையார் இறைவனுக்குப் பொங்கலிட்டு, பூசை செய்து வழிபடுவது வழக்கம். வழக்கம் போல் பொங்கலுடன் கனி,  கிழங்குகள் படைப்பதற்குப் பழங்களில் மாம்பழங்கள் ஓரிடமும் கிடைக்கவில்லை. படையல் படைத்துப் பூசையின்  பொழுது மாம்மபழம் இல்லையேயென மிக மனம் வருந்தி நாராயண உடையார் இறைவனைத் தியானித்தார்.

அப்பொழுது பிஞ்சோ, காயோ, கனியோ இல்லாத அந்த மரத்திலிருந்து அழகிய நறுஞ்சுவைமிக்க மாங்கனி விழுந்தது. இவ் அதிசயக் காட்சியைக் கண்ட உடையாரும், அடியார்களும் இறைவன் திருவருளை நினைத்து வியந்து பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். ஆண்டவன் திருக்குறிப்பினால் உணர்த்திய உடுக்கியவளையே கோயில் அமைக்க ஏற்ற திருத்தலம் என்று எல்லோரும் உணர்ந்தனர்.

கி.பி 1840ம் ஆண்டு, நாராயண உடையார் அவ்விடத்தில் பிராமணர்கள், பெரியார்கள் வழிகாட்டலில் இறைவன் திருவருளில் ஆலயம் அமைத்து மூலவருக்கு 'மகா கணபதிப்பிள்ளையார்' என நாமம் சூட்டி வழிபடுபவராயினர். அப்பொழுது அக்கோயில் பனை மரத்திலாலும் ஓலையாலும அமைக்கப்பட்டது. பிள்ளையாருக்கு பூசை செய்ய கறுவல் பூசாரி, சிவலைப்பூசாரி என்று அழைக்கப்படும் நாராயண உடையாரின் சகோதரர்கள், பூசாரிமாராக இருந்து பூசைகளைச் செய்து வரலாயினர். 1934ம் ஆண்டளவில் பூசை செய்த திரு. அம்பலவாணர் அவர்களே கடைப்பூசாரியாவார். இவரின் பின் பிராமணக் குருக்களே பூசை செய்கிறார்கள்.

பின்னர் 1860ம் ஆண்டில் சிறப்பாகக் கோயில் திருத்திக் கட்டப்பட்டது. இக்காலத்தில் நாராயண உடையாரின் பேரன் மார்க்கண்டு அவர்கள் கோயிற் பரிபாலகரராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1934ம் ஆண்டு கோயில் வைரக்கற்களாற் திருத்தி அமைக்கப்பட்டது. இதற்கு முன் பரமானந்தபிள்ளை சிவப்பிரகாவம்பிள்ளை அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்றுத் தன் வாழ்நாள் முழுதும் ஆலய தொண்டில் ஈடுபட்டார். 1983ம் ஆண்டு வசந்த மண்டபம், வைரவர் கோயில், மணிக்கூட்டுக் கோபுரம், மடப்பள்ளி ஆகியன ஸ்தாபிக்கப்பட்டன. எழுந்தருளி விநாயகர், வைரவ மூர்த்தி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். வைரவ மூர்த்தியின் பிரகாரம் ஆலயத்துள் மட்டுமலலாது, ஆலயத்து வளவுள்ளும் சிறு தனிக்கோயிலாக இன்றும் உள்ளது. 1962ம் ஆண்டு கோயில் பாலஸ்தாபனம்  செய்யப்பட்டு, மூலஸ்தானம் திருத்தி மீளமைக்கப்பட்டு, கலசம் ஸ்தாபிக்கப்பட்டது. முன் மூலவராக இருந்த லிங்கரூப மகா கணபதிப்பிள்ளையார் தம்பத்தடியில் (பலிபீடத்தக்கு முன்னால்) ஆரோகனித்து எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் மூர்த்தியாக மகா கணபதிப்பிள்ளையார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏறக்குறைய 1969ம் ஆண்டு தொடக்கம் ஆலயத்தின் முதற் பூசாரிகளில் ஒருவரான சிவலைப் பூசாரியின் வழித்தோன்றலில் ஒருவரான சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று இன்று வரை ஆலயத்தின் வளர்ச்சிக்குத் தன்னையே அர்ப்பணித்துள்ளார். 1980ம் ஆண்டு மீண்டும் புனருத்தாரணம் நடைபெற்றது. தெற்கு வாசல் மண்டபம், முன் வாசலில் பொது மண்டபம், ஆகியன கட்டப்பட்டும் கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்றன. புதிதாக வைரவரின் திருச்சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப் புனருத்தாரணம் 1992ம் ஆண்டு முடிவுறப் பங்குனித்திங்கள் 7ம் நாள் (20.03.1992) வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் பிள்ளையார் திருவருளால் இனிது நிறைவேறியுள்ளது.

ஆலயங்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை புனருத்தாரணமும் கும்பாபிஷேகமும் நடைபெறும் வழக்கத்திற்கமைவாகவும், அத்தியாவசியத் திருப்பணிகள் செய்யவேண்டி இருந்தமையாலும் நிகமும் பங்குனி மாதம் 7ஆம் நாள் 21.03.2004 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரையிலமைந்த சுபமுகூர்த்தில் பாலஸ்தாபனம் நடைபெற்றது.
ஆலயப் புனர்நிர்மானத்தின் பொழுது, முன்வாசல் மண்டபம் நீட்டப்பட்டு, வில்வளைவுடைய அமைப்பிற்கு மாற்றப்பட்டது. தூபி, மண்டபங்கள் பழுதுபார்க்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. தென்திசையிலிருந்த களஞ்சியசாலை, மடப்பள்ளி, ஏனைய அறைகளும்  தூர்ந்து போனமையால் அவை புதிதாகத் திருத்தி அமைக்கப்பட்டன. வசந்தமண்டபப் பூசையினை அடியார்கள் வெளியிலிருந்தும் பார்த்து வழிபடத்தக்கதாகத் தெற்குப்பக்கச் சுவரிற் சாரளம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆலயத்தின் ஸ்நபன மண்டபத்தில் ஏற்கனவே வடபாகத்தில் அமைக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானின்  மண்டபம் தற்பொழுது தென்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிவலிங்கப் பெருமானுடன் சக்தி அம்மையைப் பிரதிஷ;டை செய்வதற்காக வடபாகத்திற் புதிய மண்டபம் கட்டுப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் ஆலயத்துக்கு உள்வீதி மாத்திரமே இருந்தது. இம்முறை ஆலயத்தின் மேற்குத் திசையிலிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று அந் நிலங்களின் ஒரு பகுதி ஆலயத்தின் வெளிவீதியாகப் பாவனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு நிலங்களுடன் மேற்கு நிலமும் சேர்க்கப்பட்டு, ஆலயத்துக்கென வெளிவீதி அமைக்கப்ட்டுள்ளது. இவ்வாண்டின் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் பொழுதே முதன்முதலான இவ்வெளிவீதி பாவனைக்கு வந்துள்ளது.

புதிதாகப்  பஞ்சமுக விநாயகர் திருவுருவம், பிரதிஷ;டை செய்வதற்காக ஆலயத்திற்கு 23.04.2004 (வெள்ளிக்கிழமை), சதுர்த்தி தினத்தன்று ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் புதிதாக அம்மன் திருவுருவமும் 16.05.2004 (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ;டை செய்வதற்காகக் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இத்திருவுருவம், ஸ்நபன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சமுக விநாயகர், அம்மன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட முன் 04.06.2004 வெள்ளிக்கிழமை அன்று அடியார்களின் பஜனையுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் திருவுலா பவனி நடைபெற்றது. மகா கும்பாபிஷேக ஆரம்ப நிகழ்வான யந்திரபூசை 07.06.2004 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் ஆரம்பமாயிற்று. மகா கும்பாபிஷேகம் தாரணவருடம் வைகாசி மாதம் 25ம் நாள் (07.06.2004) திங்கட்கிழமை முற்பகல் 10.46 மணி முதல் 11.40 மணிவரையிலான திருவோண நட்சத்திர சுபவேளையில் பிள்ளையாரின் திருவருளால் இனிது நிகழ்ந்துள்ளது.

கும்பாபிஷேகப் பிரதமகுரு:- சிவஸ்ரீ. வி. இராமமூர்த்திக்குருக்கள்
ஆலய குரு :- சிவஸ்ரீ ச. நடராசசர்மா

அன்று தொட்டு இன்று வரை அடியார்கள் பிள்ளையாரிடம் பெரும் பக்தி பூண்டு, கோயிற் திருப்பணிகளின் பொழுது தங்களால் இயன்ற காணிக்கைகளையும், உதவி ஒத்துழைப்புக்களையும் வழங்கியும், ஆலய வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தும் பல்வேறு வழிகளிற் தொண்டாற்றியும் வருகின்றனர். ஆலயத்திருப்பணிக்கும், பரிபாலனத்துக்கும், வெளிநாட்டிலுள்ள விநாயகர் அடியார்கள், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள்.

ஆலயதில் புனருத்தாரணமும் கும்பாபிஷேகமும் செய்யவேண்டி இருப்பதனால் தற்போது ஆலய அறங்காவலரின் வேண்டுகோலுக்கமைய 27.12.2015 ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பணிச் சபையானது உருவாக்கப்பட்டுள்ளது. இச்சபையானது ஆலய திருப்பணியை அடியார்களின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளது.

விநாயகப் பெருமானுக்கு மங்களம் சேர் மன்மத ஆண்டு தை மாதம் 29ம் நாள் (12.02.2016) வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியும் சித்தயோகமும் குரு ஹோரையும் கூடிய காலை 10 மணி 10 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரையுள்ள மேஷ லக்கின சுப முகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் நிகழ விநாயகர் திருவுளம் கொண்டுள்ளதால் இவ் வழிபாட்டினை அடியார்கள் தரிசித்து பெருஞ்சாந்தி காண்பீர்களாக.